top of page

தட.. தட.. தடா பெரியசாமி!

 

ஆந்திர நக்சல்கள் பாணியில் ஒரு காலத்தில் ஒருங்கிணைந்த பெரம்பலூர் பிராந்தியத்தை, சிவப்புச் சிந்தனைகளால் சூடாக்கிய மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் அமைப்புகளின் அடித்தளமாகச் செயல் பட்டவர். தமிழ்த் தேசியம், தலித் இயக்கம், மார்க்ஸியம் என்று புழுதி கிளப்பிய ஒரு பெரியாரிஸ்ட். இன்றைக்கு கடவுள் வாழ்த்து எழுதிக்கொண்டு இருக்கிறார் என்றால் நம்ப முடியுமா?

உஜாலா மாற்றத்தில் இருக்கிறார் 'தடா’ பெரியசாமி. எப்படி இந்த மாற்றம் என்று கேட்டால், பகபகவெனச் சிரிக்கிறார். 'நந்தனார் சேவாசிரம டிரஸ்ட்’ என்ற தொண்டு நிறுவனத்தின் கீழ் இரண்டு மாவட்டங்களிலும் மாணவர்களுக்கு மாலை வகுப்புகள், பெண்களுக்குக் கணினி மற்றும் தையல் பயிற்சி எனக் கலக்கிவருகிறார். சுமார் 500-க்கும் மேலான பெண்களுக்கு வேலைவாய்ப்புப் பயிற்சி கொடுத்து இருப்பதோடு, மாணவர்களுக்கான மாலை வகுப்புகளில் பாடம் மட்டுமல்லாது; தியானம், யோகா, நீதி போதனை, விளையாட்டு   எனப் பள்ளிக்கூடங்கள் புறக்கணித்த அம்சங்களையும் தன்னுடைய பாணியில் பயிற்றுவிக்கிறார்.

'ப்ளஸ் டூ படிக்கும்போதுதான் தமிழ் என்னைப் பற்றிக்கொண்டது. அப்போது தமிழ்த் தாகத்தில் தவித்தவர்களை அரவணைத்துக்கொண்டது புலவர் கலியபெரு மாள் இயக்கிய மார்க்ஸிஸ்ட்- லெனினிஸ்ட் அமைப்பு. 'முந்திரிக் காடு மக்களுக்கே சொந்தம்’ என்ற வீச்சோடு அரியலூர் வட்டாரத்தில் இளைஞர்கள் எழுச்சியோடு இயங்கிய காலம் அது. சுந்தரம், தமிழரசன், பொன்பரப்பி ராஜேந்திரன், தர்மலிங்கம் என, ஏரியாவைக் கிடுகிடுக்கவைத்தவர்களின் பின்னணியில், அவர்களின் தளபதிகளாக நாங்கள் இயங்கிக் கொண்டு இருந்தோம்.

 

அரியலூர் மருதையாற்றுப் பாலம் குண்டுவெடிப்பு வழக்கில் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டபோது, வெளி உலகுக்குத் தெரியவந்தேன். தூக்குத் தண்டனை கைதியாக மூன்று வருட சிறைவாசத்தின்போது படித்த புத்தகங்களில் நமது சித்தர்களின் பாரம்பரியமும் பெருமையும் என்னை வெகுவாக ஈர்த்தன' என்று சொல்லும் பெரியசாமி, தடாலடியாக பா.ஜ.க-வில் சேர்ந்ததும் காஞ்சி சங்கர மடத்துக்கு நெருக்கமானவராக அறியப்பட்டதும் அடடே மாற்றங்கள்.

  'தத்துவமும் சித்தாந்தமுமாக வளையவந்த தடா பெரிய சாமி தடம்புரண்டுவிட்டாரா?’ என்று கேட்டால் ஆணித்தரமாக எதிர் வாதங்களை அடுக்குகிறார்.

''இலங்கைத் தமிழனுக்கு ஒன்று என்றால் உரக்கக் குரல் கொடுப்பவர்கள்; சேரித் தமிழன் சீரழிந்தால் மட்டும் அமைதிகாப்பவர்கள் மத்தியில் அசிங்க அரசியல் நடத்த விரும்பவில்லை. சிறை வாசத்தில் நான் படித்த நமது சித்தர்களின் நூல்கள்தான் என்னைப் புரட்டிப்போட்டன. அதில் இருந்து நான் உள்வாங்கிக்கொண்ட கருத்துகளை ஆத்மார்த்தமாக என் அடுத்த தலைமுறைக்குக் கொண்டுபோகிறேன்' என்று சொல்லும் தடா பெரியசாமி, சத்தம் இல்லாமல் சமர்த்தாக சாதித்துக்கொண்டும் இருக்கிறார்.

 

கடந்த வருடம் இவர் தொடங்கிய மண்ணுரிமை மீட்பு இயக்கத்தின் சார்பில், தமிழகம் முழுவதும் உள்ள பஞ்சமி நிலப் பட்டியலை தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ், வாங்கிப் பட்டியலாகத் தொகுத்துவைத்து இருக்கிறார். முதல் முன்னுதாரண நடவடிக்கையாக பெரம்பலூர் மாவட்ட தலித்துகள் இருவருக்கு இரண்டு தலைமுறையாக வேறு ஒருவர் அபகரிப்பில் இருந்த அவர்களின் நிலத்தை மீட்டுத் தந்து இருக்கிறார்.

இவர், இதை எல்லாம் சேவைபோல செய்தாலும், ''மத்தியில் அடுத்தது பா.ஜ.க-தான். சிதம்பரம் தொகுதி இப்பவே தயார். அமைச்சரவையின் தலித்துகளுக்கான கோட்டாவில் அண்ணனுக்கு நிச்சயம் இடம் உண்டு'' என்று நிதின் கட்காரிக்கே தெரியாத ரகசியத்தைப் போட்டு உடைக்கிறார்கள் தடாவின் தம்பிகள்!

  • Black Facebook Icon
  • Black Twitter Icon
  • Black Pinterest Icon
  • Black Instagram Icon

© 2023 by  Emilia Carter. Proudly created with Wix.com

bottom of page