top of page

போயஸ் இல்லத்தில் நடந்த சோதனை குறித்து கேள்வி: சங்கர மடத்துக்குள் பூட்ஸ் காலுடன் போலீஸை அனுப்பியவர்தானே ஜெயலலிதா - தடா பெரியசாமி ஆவேச பதில்

கோயில் போன்ற சங்கர மடத்துக்குள் பூட்ஸ் காலுடன் காவல் துறையை அனுப்பியவர்தான் ஜெயலலிதா என பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் தடா பெரியசாமி கூறியுள்ளார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் திருமாவளவனுக்கு அடுத்து முக்கியப் பொறுப்பில் இருந்தவர் தடா பெரியசாமி. 2004-ல் பாஜகவில் இணைந்த அவர், சிதம்பரம் மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். அதன்பிறகு அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்தவர் மீண்டும் தீவிர அரசியலுக்கு திரும்பியிருக்கிறார்.

காஞ்சி சங்கராச்சாரியார் ஸ்ரீ ஜெயேந்திரரின் நண்பரான தடா பெரியசாமி, ‘நந்தனார் சேவாஸ்ரம டிரஸ்ட்’ என்ற அறக்கட்டளை மூலம் இலவச டியூஷன் வகுப்புகளையும் நடத்தி வருகிறார். பாஜக மாநில செயற்குழு உறுப்பினர், கடலூர் மக்களவை தொகுதி பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள அவர் ‘தி இந்து’வுக்கு அளித்த சிறப்புப் பேட்டி:

2004 தேர்தலுக்குப் பிறகு அரசியல் களத்தில் உங்களை பார்க்க முடியவில்லையே?

2004 தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் தோல்வி அடைந்த பிறகு நந்தனார் சேவாஸ்ரம டிரஸ்ட் தொடங்கி சமூகப் பணிகளில் ஈடுபட்டு வருகிறேன். அதனால் அரசியலில் ஈடுபட முடியவில்லை. ஆர்எஸ்எஸ், விஸ்வ இந்து பரிஷத் போன்ற அமைப்புகளுடன், சுவாமி தயானந்த சரஸ்வதியுடனும் இணைந்து செயல்பட்டு வந்தேன்.

சசிகலா குடும்பத்தினர் மீதான வருமானவரித் துறை சோதனையை எப்படி பார்க்கிறீர்கள்?

சசிகலா, தினகரன் குடும்பத்தினர் மீதான மெகா வருமானவரித் துறை சோதனையை தமிழக மக்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்கிறார்கள். இதனை முன்னரே செய்திருக்க வேண்டும் என்பதே மக்களின் எண்ணம்.

போயஸ் கார்டன் இல்லத்திலும் சோதனை நடந்துள்ளதே?

போயஸ் கார்டன் இல்லத்தில் ஜெயலலிதா மட்டும் வசிக்கவில்லை. பல்வேறு வழக்குகளில் சம்பந்தப்பட்ட சசிகலா, இளவரசி, விவேக் ஆகியோர் வசித்தனர். எனவே, அங்கு சோதனை நடத்தியது சரிதான். ஆனால், சசிகலா தரப்பினர் மட்டுமல்லாது, முதல்வர் பழனிசாமி அணியினரும் கோயில் போன்ற ஜெயலலிதா இல்லத்தில் எப்படி சோதனை நடத்தலாம் என கேள்வி எழுப்பி வருகின்றனர். இதனை கேட்டபோது கடந்த 2004-ல் ஸ்ரீ ஜெயந்திரர் கைது செய்யப்பட்டபோது காஞ்சிபுரம் சங்கர மடத்தில் நடந்த சோதனை தான் நினைவுக்கு வருகிறது. அப்போது மடத்தில் உள்ளவர்கள் வேண்டுகோள் விடுத்தும் பூட்ஸ் காலுடன் நுழைந்து காவல் துறையினர் சோதனை நடத்தினர். இதற்கு ஜெயலலிதாவே காரணம். சங்கர மடம் உண்மையிலேயே கோயில். இன்று போயஸ் கார்டனை கோயில் என்பவர்கள் பழைய வரலாற்றை நினைத்துப் பார்க்க வேண்டும். தான் கைது செய்யப்பட்டதைவிட சங்கர மடத்தில் பூட்ஸ் காலுடன் காவல்துறையினர் சோதனை நடத்தியதை நினைத்துதான் ஜெயேந்திரர் வருந்தினார். போயஸ் கார்டனில் நடந்த சோதனையைப் பார்க்கும்போது ‘தெய்வம் நின்று கொல்லும்’ என்ற பழமொழி நினைவுக்கு வருகிறது. இவ்வாறு தடா பெரியசாமி கூறினார்.

  • Black Facebook Icon
  • Black Twitter Icon
  • Black Pinterest Icon
  • Black Instagram Icon

© 2023 by  Emilia Carter. Proudly created with Wix.com

bottom of page