சிறை வாழ்க்கை​

கல்லகம் ரயில்வே தண்டவாள குண்டுவெடிப்பு தொடர்பான வழக்கில், தடா பெரியசாமிக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, தீர்ப்பு அளித்து உள்ளது திருச்சி தடா சிறப்பு நீதிமன்றம். 20 ஆண்டு கள் கழித்து வந்திருக்கும் தீர்ப்பு, பரபரப்பைக் கிளப்பி இருக்கிறது! 

 

1992-ம் ஆண்டு அக்டோபர் 24-ம் தேதி. விருத்தாசலம் அருகே கல்லகம் - பழங்காநத்தம் ஆகிய ஊர்களுக்கு இடையே ரயில்வே தண்டவாளத்தில் குண்டு வெடித் தது. சென்னையில் இருந்து கொச்சி சென்ற கொல்லம் எக்ஸ்பிரஸ் ரயில் நடுவழியில் நிறுத்தப் பட்டதால், சேதங்கள் ஏதும் இல்லை. ஒன்றரை ஆண்டு காலத்துக்குப் பிறகும், விருத்தாசலம் ரயில்வே போலீஸாரால், குண்டு வைத்தவர்களைக் கண்டுபிடிக்க முடியாததால், வழக்கு க்யூ பிராஞ்ச் போலீஸாருக்கு மாற்றப் பட்டது. 'இந்திய அரசே... ஈழத் தமிழர்கள் மீதான போருக்குத் தயாராகாதே’ என்ற வாசகங்கள் அடங்கிய துண்டறிக்கை சம்பவ இடத்தில் கண்டு எடுக்கப்பட்டதை வைத்து க்யூ பிராஞ்ச் போலீஸார் விசாரணையில் இறங்கினார்கள். அதன் அடிப்படையில், கடலூர் பெத்தாகுப்பத்தைச் சேர்ந்த வர்களான செந்தில்குமார், லெனின், நாகராஜன், தேனி சீலயம்பட்டியைச் சேர்ந்த ராஜாராம், பெரம்பலூரைச் சேர்ந்த (தடா) பெரியசாமி ஆகியோரைக் கைது செய்து, தடா சட்டத்தில் உள்ளே தள்ளியது காவல் துறை. அவர்களில் லெனின் திண்டுக்கல்லிலும், ராஜாராம் சைதாப்பேட்டை நீதிமன்றத்துக்குக் கொண்டுசெல்லும் வழியிலும் என்கவுன்ட்டர் செய்யப்பட்டார்கள். ஒரு குண்டுவெடிப்பு சம்பவத்தில் நாகராஜன் இறந்துபோனார். மீதம் இருந்தவர்களில் தடா பெரிய சாமிக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத் தண்டனையும், செந்தில்குமாருக்கு ஆயுள் தண்டனையும் விதித்துத் தீர்ப்பு வழங்கி உள்ளது தடா நீதிமன்றம்.

ஆரம்பத்தில் தமிழக மக்கள் விடுதலைப் படை அமைப்பில் இருந்த தடா பெரியசாமி, விடுதலைச்சிறுத்தைகள் கட்சியை ஆரம்பித் தவர்களில் முக்கியமானவர். கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த தடா பெரியசாமியை, அவரது செயல்பாடுகள் சரியில்லை என்று கட்சியில் இருந்து நீக்கினார்கள். பின்னர் 'டெலோ’ (தலித் விடுதலை இயக்கம்) என்ற அமைப்பை ஆரம்பித்து நடத்தினார். அதன் பிறகு பி.ஜே.பி-யில் இணைந்தார். 2004 நாடாளுமன்றத் தேர்தலில் திருமாவளவனை எதிர்த்து சிதம்பரம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். பின்னர், பகுஜன் சமாஜ்வாடி கட்சியில் இணைந்தவர், அங்கிருந்தும் பிரிந்து, நந்தனார் கல்வி அறக் கட்டளை என்ற அமைப்பை நடத்தி வருகிறார்.

திருச்சி மத்தியச் சிறையில் இருக்கும் தடா பெரியசாமியை அவரது வழக்கறிஞர் மூலமாகச் சந்தித்து பேசினோம்.

 

''ஈழத் தமிழரின் நலனுக்காகவும் தமிழ்த் தேசிய நலனைப் பாது காக்க வலியுறுத்தியும், மத்திய அரசின் கவனத்தை ஈர்ப்பதற்காக அந்தச் சம்பவம் நிகழ்த்தப்பட்டது. அப்பாவி மக்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படக்கூடாது என்பதிலும் உறுதியாக இருந்தோம். தமிழ்நாடு விடுதலைப் படையும், தமிழக மக்கள் விடுதலைப் படையும் சேர்ந்து இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டன. போராளிகளுக்கு உணவு கொடுக் கும்படி துறைமங்கலத்தைச் சேர்ந்த ஒருவரிடம் நான் சொன்னதாக என் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அரசால் கொண்டுவரப்பட்ட தடா சட்டம் நீக்கப்பட்ட பிறகும்கூட, இல்லாத சட்டத்தின் கீழ் தண்டனை வழங்கி இருப்பது வேடிக்கை. இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மட்டுமே மேல்முறையீடு செய்ய முடியும் என்பதால், அதனை நாட இருக்கிறோம். உண்மையில் வெடிகுண்டு வைப்பது போன்ற போராட்டங்களில் எனக்கு நம்பிக்கை இல்லை. உரிமைகளை மீட்டெடுப்பதற்காக மக்களை ஒன்று திரட்டிப் போராட வேண்டியதுதான் இறுதித் தீர்வாக இருக்கிறது.

 

என்னை இந்தக் குண்டு வெடிப்பு வழக்கில் சேர்த்தால், நான் அடங்கி விடுவேன் என்று நினைத்தார்கள். ஆனால், நான் முன்னைவிட அதிக வேகத்தோடு தலித்களின் நில உரிமைப் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்றேன். இந்த நிலையில்தான், மீண்டும் சிறையில் தள்ளப்பட்டு இருக்கிறேன். இதுபோன்ற ஒடுக்குமுறை சட்டத்தின் கீழ் தண்டனை வழங்குவதால், மக்கள் உரிமைக்குக் குரல் கொடுப்பவர்களை ஒடுக்கிவிட முடியாது.''

 

''தமிழகத்தில் நடைபெறும் ஈழம் தொடர்பான போராட்டங் களைப் பற்றி உங்கள் கருத்து என்ன?''

''தமிழகச் சூழலில் இயங்கும் இயக்கங்கள், ஈழத் தமிழர் நலனைப் பார்ப்பதாகச் சொல்லிக்கொண்டு, தாழ்த்தப்பட்டவர்களின் நலனை விட்டுவிட்டார்கள். தலித் உரிமைகளை இணைக்காத எந்தப் போராட்டமும் வெற்றி பெற்றது இல்லை. இங்கு இருக்கிற இயக்கங்கள் தாழ்த்தப்பட்டவர்களின் உயிரோட்டமாகக் கருதப்படும் பஞ்சமி நில மீட்பு, இட ஒதுக்கீடு, வன்கொடுமைத் தடுப்புச் சட்டம், தாழ்த்தப்பட்டவர்கள் மேம்பாடு போன்ற வற்றுக்கான போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும். அப்போதுதான் மக்களுக்கு உண்மையான தீர்வு கிடைக்கும்.''

 

''வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் பி.ஜே.பி. சார்பில் சிதம்பரத்தில் உங்களுக்கு ஸீட் ஒதுக்கப்பட உள்ளதாக பேச்சு இருக்கிறதே?''

''நானும் கேள்விப்பட்டேன். ஆனால் இந்தத் தீர்ப்பு, என்னுடைய தேர்தல் கனவைத் தகர்த்துவிட்டது. இதற்கு உச்ச நீதிமன்றத் தீர்ப்புதான் பதிலாக இருக்கும்.''

 

''தீர்ப்பு வெளியான பிறகு விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன், உங்களிடம் பேசினாரா?''

''இல்லை. செந்திலுக்கு மட்டும் ஆறுதல் சொன்னார். யாருக்கு ஆறுதல் தேவைப்படும் என்பது திருமாவுக்கு நன்றாகத் தெரியும். அதனால்தான் செந்தில் மற்றும் அவரது குடும்பத்தாருடன் மட்டும் பேசி இருக்கிறார். அவருக்கே ஆறுதல் சொல்லும் தகுதி எனக்கு இருக்கிறது!''