top of page

ஜாதிய பாகுபாடுகளை களைந்த சங்கராச்சாரியார் 

ஜாதிய பாகுபாடுகளை களைந்த சங்கராச்சாரியார்

2003-ஆம் ஆண்டு சங்கராச்சாரியார் எனக்கு அறிமுகம் ஆனார். தலித் மக்கள் சங்கர மடத்தின் அதிகார பீடத்தை நெருங்க முடியாது என பலர் கூறியதைக் கேட்டிருக்கிறேன். ஆனால், அவரை சந்திக்கச் சென்ற போது நான் கேள்விப்பட்ட கூற்று பொய் என்பதை உணர்ந்து கொண்டேன்.

பாஜக தலைவர் அத்வானி, தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன் ஆகியோருக்கு கிடைத்த அதே மரியாதை சங்கர மடத்தில் எனக்கும் கிடைத்தது. அறிமுகம் ஆன சில மாதங்களிலேயே 2004-ல் நாடாளுமன்றத் தேர்தல் வந்தது. அந்த தேர்தலில் பா.ஜ.க. வேட்பாளராக சிதம்பரம் மக்களவை தொகுதியில் போட்டியிட கட்சி மேலிடத்தில் என்னை பரிந்துரை செய்தவர். ஸ்ரீ ஜெயேந்திரர். அதன்படி போட்டியிடும் வாய்ப்பும் கிட்டியது.

நான் தமிழகத்திலுள்ள அனைத்து இந்து மடங்களுக்கும் சென்று வந்திருக்கிறேன். ஆனால், தலித் மக்களின் முன்னேற்றத்தில் அக்கறை காட்டியதில் சங்கரமடம் மற்ற மடங்களைக் காட்டிலும் முன்னிலையில் இருந்தது.

நான் தலித் மக்கள் மேம்பாட்டுக்காக சேவை அமைப்பு ஒன்றை உருவாக்குவது குறித்து யோசித்துக் கொண்டிருந்தபோது, ‘நந்தனார் சேவாஸ்ரமம் ட்ரஸ்ட்’ என பெயர் வைக்கச் சொல்லி ஊக்கப்படுத்தியவர் ஸ்ரீ ஜெயேந்திரர். பெரம்பலூர், அரியலூர், கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சுமார் 30 தலித் பெண்களுக்கு தையல் இயந்திரங்கள் வாங்கிக் கொடுத்து அவர்களது வாழ்க்கைத்தரம் உயர உதவிக்கரம் நீட்டினார்.

தலித் மாணவர்கள் 20 பேர் உயர் கல்வி பயில உதவி செய்துள்ளார். நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களுக்கு இலவச தையல் பயிற்சி அளிக்க உதவினார். ஒரு குழந்தைக்கு இதய அறுவை சிகிச்சை கிடைக்க உதவினார். இப்படி பல்வேறு உதவிகளை இப்பகுதி தலித் மக்களுக்காக செய்துகொடுத்தார்.

பெரம்பலூர் ரஞ்சன்குடி கிராமத்தில் தலித் இளைஞர்களுக்காக தொழிற்பயிற்சி மையம் ஒன்றும், மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட உயர் கல்வி பயில்வதற்கு தேவையான நீட், ஜே.இ.இ. போன்ற போட்டித் தேர்வுகளுக்கு தரமான பயிற்சி அளிக்கும் பயிற்சி மையம் ஒன்றும் உருவாக்கத் திட்டமிட்டிருந்தேன்.

இதுகுறித்து சங்கராச்சாரியாரிடம் தெரிவித்தேன். ‘நல்ல விஷயம் தாராளமாக செய்யலாம்’ எனச் சொல்லி என்னை ஊக்கப்படுத்தினார். அந்தப் பணி தொடங்கும் முன்பே அவர் மறைந்தது அதிர்ச்சியளிக்கிறது. அவரது இழப்பு தலித் சமூகத்துக்கு பேரிழப்பு.

bottom of page