சிக்கலாகிறது சிறுதாவூர் விவகாரம்...

 

* 2006 ம் ஆண்டு விகடனில் வெளிவந்த பேட்டி​

சிக்கலாகிறது சிறுதாவூர் விவகாரம்...

‘‘கருணாநிதியும் ஜெயலலிதாவும் வித்தை காட்டுகிறார்கள்!’’

'சிறுதாவூர் நில விவகாரத்தில் அரசு தரப்பு மற்றும் ஜெயலலிதா தரப்பு இரண்டுமே தலித் மக்களை ஏமாற்றுகின்றன...’ என்று சொல்லி, கடும் கோபத்தில் இருக்கிறார்கள் தலித் இயக்கங்களைச் சேர்ந்த சில தலைவர்கள். ‘சிறுதாவூர் நில மீட்பு கூட்டமைப்பு’ என்ற ஒன்றை ஏற்படுத்தி, ‘நிலத்தை மீட்கும் வரையில் ஓயப்போவதில்லை...’ என்று அறிவித்து, களமிறங்கும் முயற்சியில் இருக்கும் அந்தத் தலைவர்களை ஒருங்கிணைக்கும் பணியில் தீவிரமாக இருக்கிறார் ‘தடா’ பெரியசாமி. ஒரு காலத்தில் விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் முக்கிய தளபதிகளில் ஒருவராக இருந்த இவர், தற்போது பி.ஜே.பி இயக்கத்தில் இருக்கிறார். ‘தடா’ பெரியசாமியை நாம் சந்தித்துப் பேசினோம்.

‘‘சிறுதாவூர் நில விவகாரத்தில் என்ன நடக்கிறது என்பதை விட்டுவிட்டு, அதைத் திசைதிருப்பும் வகையில் தான் அரசாங்கமும் ஜெயலலிதாவும் வித்தை காட்டிக் கொண்டிருக்கிறார்கள். சிறுதாவூரில் இருக்கும் பங்களாவுக்கு சொந்தக்காரர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இல்லை என்று அவரே அறிக்கை வாயிலாக சொல்லியிருக்கிறார். அப்படி என்றால், அந்த பங்களாவுக்குச் சொந்தக்காரர் யார் என்று சொல்லிவிட்டுப் போவதில் இவருக்கு என்ன சங்கடம் இருக்கிறது... அதில் என்ன ரகசியம் வேண்டியிருக்கிறது? அவருடைய பெயரைச் சொல்லி இருந்தால், இந்நேரம் பங்களா பற்றிய சர்ச்சை, முடிவுக்கு வந்திருக்கும். அதை விட்டுவிட்டு, இந்தக் கேள்வியை எழுப்பினார் முதல்வர் கருணாநிதி என்பதற்காக, அவருடைய சொத்துக்களைப் பற்றியும் அவரது குடும்பத்துக்கு இருக்கும் சொத்துக்கள் குறித்தும் கேள்விமேல் கேள்வி எழுப்பி, வம்புக்கு வலுவூட்டிக் கொண்டிருக்கிறார் ஜெயலலிதா. அதுதான் இந்த நில அபகரிப்பு குற்றச் சாட்டில் உண்மை இருக்கிறதோ என்று எல்லோரையும் சந்தேகம் கொள்ள வைக்கிறது. 'பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால், கொட்டைப்பாக்கு விலை சொல்வது போல' என்று கிராமத்துப் பக்கம் கிண்டலாக சொல்வார்கள். அந்த ரகத்தில்தான் இருக்கிறது ஜெயலலிதா சொல்வது.

இவர்தான் இப்படி என்றால், இவருக்கு ஆதரவு கரம் நீட்டி களத்துக்கு வந்திருக்கும் அண்ணன் வைகோவின் கருத்து என்னவாக இருக்கிறது பாருங்கள்... ‘ஒரு பிட் நிலம்கூட சிறுதாவூர் பங்களாவுக்குள் ஆக்ரமிப்பாக இல்லையாம். அதில் தலித் நிலமும் இல்லையாம்...’ எந்த ஆதாரத்தை வைத்துக்கொண்டு இதனையெல்லாம் அவர் சொல்கிறார் என்றும் புரியவில்லை. தமிழக அரசியலில் ஜெயலலிதாவோடு இணைந்து போனால்தான் வாழ்க்கை என்றிருக்கும் வைகோவுக்கு வேறு வழியில்லை. ஆனால், தலித் தலைவர் என்று சொல்லிக்கொள்ளும் தொல். திருமாவளவனும் அதே கருத்தை வழிமொழிகிறாரே... இதை என்னவென்று சொல்வது? கூட்டணிக் கட்சித் தலைவரின் வேண்டுகோள் இதுதான் என்றால், அதை வெளிப்படையாகச் சொல்லலாமே... அதைவிட்டுவிட்டு, உண்மை தெரிந்தவர்போல பேசுவதுதானே புரியவில்லை. அப்படியென்றால், தன் சமூகம் பாதிக்கப்படுவதைப் பற்றி அவருக்குக் கவலையில்லை. ரோட்டுக்கு வந்து போராடிக் கொண்டிருக்கும் அந்த தலித் மக்களைப் பற்றியோ அவர்களின் உணர்வுகள் குறித்தோ இவர் என்ன அக்கறை கொண்டிருக்கிறார் பாருங்கள்!

பிற கட்டுரைகள்

சிறுதாவூர் பங்களா... யார் முதலாளி?

இவர்கள்தான் இப்படி அரசியலுக்காக இந்த விவகாரத்தை இழுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்றால், நம்முடைய முதல்வர் இந்த விவகாரத்தில் காட்டும் அரசியல் வித்தைகளைப் பாருங்கள். அத்தனையும் அருவருக்கத்தக்க பச்சை அரசியல்.

எந்த நிலம் யாருடையது என்பதை அரசாங்கத்தைக் கையில் வைத்திருக்கும் கருணாநிதியால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், கருணாநிதி முதல்வராக இருக்கத் தகுதி இல்லை என்றுதான் அர்த்தம். பத்திரப்பதிவுத் துறை தலைவரை அழைத்து, சிறுதாவூர் நில விவகாரம் தொடர்பான அனைத்துப் பத்திரங்களையும் கொண்டு வாருங்கள் என்று சொன்னால், அவர் கொண்டு வரமாட்டாரா? அரைமணி நேரத்துக்குள் குறிப்பிட்ட அந்த பங்களா யாருடையது என்று கண்டுபிடித்துவிட முடியாதா? பங்களாவை ஒட்டி ஏழை மற்றும் தலித்களின் நிலம் ஆக்ரமிக்கப்பட்டிருக்கிறதா... அல்லது விலை கொடுத்து வாங்கப்பட்டிருக்கிறதா என்பதைக் கண்டு பிடித்துவிட முடியாதா? இதற்குப் போய் கமிஷன் போட்டு விசாரிக்கிறாராம். ஒரு விஷயத்தை ஆறப்போட வேண்டும் என்றால்தான் கமிஷன் போடுவது என்பது நடைமுறை. ஆக, இந்த விவகாரத்தில் உண்மை என்ன என்பதை ஊர் உலகம் அறிந்துகொள்ள வேண்டும் என்பதில் கருணாநிதிக்கு அக்கறை இல்லை.

கருணாநிதியும் ஜெயலலிதாவுடன் சேர்ந்துகொண்டு தலித் மக்கள் தலையில் அரசியல் மிளகாயை மிக நன்றாக அரைத்துக் கொண்டிருக்கிறார். ஆனால், உள்ளாட்சித் தேர்தல் வரவிருக்கிறது. அதில் தலித் மக்களும் ஓட்டுபோட வேண்டும் என்பதை இரண்டு தலைவர்களும் கவனத்தில் கொண்டு, தங்கள் அரசியல் விளையாட்டுக்களை அமைத்துக் கொள்வது நல்லது'' என்று எச்சரிகை விட்ட பெரியசாமி,

''விவகாரத்தை இப்படியே ஜவ்வாக இரண்டு தரப்பும் இழுக்கும் முயற்சியில் தீவிரமாக இருப்பது தெரியவருவதால், விரைவில் இந்த விவகாரம் தொடர்பாக மாபெரும் போராட்டத்தை நடத்துவதோடு, சட்டரீதியாகவும் அணுகப்போகிறோம்’’ என்று அதிர்வேட்டுக் கருத்துக்களை முடித்துக் கொண்டார்.

‘‘ஆக்ரமிப்புக்கு உள்ளானது பஞ்சமி நிலம்தான்!”

சிறுதாவூரில் ஆக்ரமிக்கப்பட்டிருக்கும் நிலம் பஞ்சமி நிலமே அல்ல என்று அந்தப் போராட்டத்தில் இருக்கும் மார்க்சிஸ்ட் கட்சி சொல்லிக் கொண்டிருக்க... 'அந்த நிலம் பஞ்சமி நிலம்தான்' என்று புதிய குண்டு போடுகிறார் 'தடா' பெரியசாமி. ''ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் தலித் மக்களுக்கு ஒதுக்கப்பட வேண்டும் என்று சொல்லி, ஒவ்வொரு ஊரிலும் தரிசு நிலங்களை ஒதுக்கி வைக்க உத்தரவிடப்பட்டது. அதுதான் பஞ்சமி நிலம். அப்படி ஒதுக்கி வைக்கப்பட்ட நிலம்தான் காமராஜர் மற்றும் அண்ணா ஆகியோர் காலத்தில் தலித் மற்றும் தலித் அல்லாத ஏழை மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எனவே பிரச்னைக்குரிய சிறுதாவூர் நிலமும் பஞ்சமி நிலம்தான்'' என்கிறார் பெரியசாமி.

p21.jpg
p22.jpg
p22a.jpg